திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்: அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்: அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

 


திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்: அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையிலும் வடக்கிலும் உள்ள சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலன்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்னிலங்கையில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சில அரசியல்வாதிகள், சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் இனக்கலவரங்களைத் தூண்டுவதற்கும் முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆதரவை ஏற்றுக்கொள்ள முடியாமல் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், மாநகரசபை மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் உரிய முறையில் எடுக்கப்படாத காரணத்தினாலேயே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மாநகரசபையும் பொலிஸாரும் தங்களுக்குரிய பொறுப்புகளை முறையாக நிறைவேற்றாததன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, எதிர்காலத்தில் தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கும் தொடர்பில்லை – யாழ் மாநகர முதல்வர்

இதேவேளை, திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என யாழ்ப்பாண மாநகர முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவித்துள்ளார்.

சிலை அகற்றப்பட்டமைக்கு தமிழரசுக் கட்சியும் உடந்தையாக இருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர், மாநகரசபை உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனைக்கு அமைய திலீபனின் சிலையை தற்காலிகமாக வைப்பதற்கும் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கும் சபை ஏகமனதாக தீர்மானித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

சிலையை பொலிஸார் அகற்றிய நடவடிக்கைக்கும் மாநகரசபைக்கும் தொடர்பில்லை எனவும், சிலையை அகற்றும் எண்ணம் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இருந்ததில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


About Lanka Theepam